பஞ்சாப் அணியை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கியது பெங்களூர் அணி..!
இன்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ வெறும் 8 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பிரபசிம்ரன் 25, லிவிங்ஸ்டன் 17, சாம் கரண் 23, ஜித்தேஷ் சர்மா 27, என வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆட முயற்சி செய்து விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
பொறுமையாக விளையாடிய தவான் 37 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 18.6 ஆவது ஓரில் களமிறங்கிய சசான்க் சிங் எட்டு பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து அணியின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 எண்கள் குவித்தது. பெங்களூர் அணியில் சிராஜ் மற்றும் யாஸ் தயாள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் விகிதத்தை குறைக்க உதவினர்.
பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணியில் விராட் கோலி மற்றும் டூப்ளிசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டூப்ளிசிஸ் இந்த முறை 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். கேமரூன் கிரீனும் 3(5) சொதப்ப, 43 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பெங்களூர் அணி. பின்னர் ரஜட் படிதர், விராட் கோலி இருவரும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 86 ரன்களாக இருந்தபோது படிதர் 18 ரன்களில் ஆட்டம் இருந்தார். மேக்ஸ்வெல்லும் 3(5) வந்த வேகத்தில் வெளியேற, விராட் கோலி அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் அனுஜ் ராவத்தும் 11(14) வெளியேற, கடைசி 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது பெங்களூர் அணி.
கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக், லாம்ரர் இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்க, பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 21(8), லாம்ரர் 17(8) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Post a Comment